Sunday, 11 May 2025

586 ஆண்டுகள் பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு -அளே கிருஷ்ணாபுரம் கல்வெட்டு -கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் கண்டறிந்துள்ளனர்
https://youtu.be/UpfnvqSrI4M
586 ஆண்டுகள் பழமையான விஜயநகரர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் கண்டறிந்துள்ளனர். இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: ஊரின் நடுவே உள்ள பசப்பா வீட்டருகே உள்ள கருங்கல் குண்டைச் சுற்றிலும் சுமார் 20 அடி நீளத்தில் 7 வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் மேற்புறம் திரிசூலமும் கீழ்புறத்தில் அழகிய காளையும் அருகே கெண்டி, குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயன் காலத்தை சேர்ந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை உள்ளடக்கிய முள்வாய் ராஜியத்தை (தற்போது கர்நாடக மாநிலம் முலுபாகல் ) லக்கண தண்ணாயக்கர் ஆண்டுவந்தார். இதனுள் அடங்கிய விரிவிநாடு என்னும் சூளகிரி பகுதியை இவரது மகா சாவந்தாதிபதி வரதைய்ய நாயக்கர் குமாரர் பெரிய திம்மைய்யநாயக்கர் ஆண்டுவந்தார். இப்பகுதியில் தியாகப்பெருமாள் என்னும் பெயரில் சிவன் கோயில் அப்போது இருந்துள்ளது. அக்கோயிலின் பூசை செலவிற்காக பொன்னக்கோன் பள்ளியை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டு உள்ள ஹலே கிருஷ்ணாபுரமே அக்காலத்தில் பொன்னக்கோன்பள்ளி என்று அழைக்கப்பட்டது இக்கல்வெட்டு வாயிலாகத் தெரியவருகிறது. மேலும் இவ்வூரிலோ அல்லது இவ்வூருக்கு அருகிலோ தியாகப்பெருமாள் என்ற பெயரில் சிவன் கோயில் இருந்ததும் தெரியவருகிறது. எனவே சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த ஒரு ஊர் மற்றும் ஒரு சிவன் கோயில் பற்றிய செய்திகளோடு அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த அரசியல் வரலாறு குறித்து அறிந்துக் கொள்ளவும் இக்கல்வெட்டு துணைபுரிகிறது என்றார். இக்கள ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சின்னகொத்துர் மணிகண்டன், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணி ஆகியோர் அளே குந்தானி ஊர் மக்கள் உடன் இருந்தனர்.
12°45'45.6"N 78°05'42.9"E map
https://maps.app.goo.gl/WZiVN5rLfDgc3cpVA

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...