Monday, 23 March 2026

வெங்கடாபுரம் (ஊத்தங்கரை )கல்வெட்டு

 

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரத்தில் அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு இம்மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டத்தில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது கெண்டயனூர் லட்சுமணன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளியமரத்தின் அடியில் உள்ள பாறையில் சுமார் 400 ஆண்டுகளுக்குமுற்பட்ட காலத்தை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்து படித்து ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு அரிய கல்வெட்டு என்று கூறிய தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியருமான கோவிந்தராஜ் மேலும் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற பெருவேந்தர்கள் காலத்தில் பல ஏரிகளை வெட்டி நீர் பாசனத்தை பெருக்கி விவசாயம் வளர்க்கப்பட்டதை பல கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். ஆனால் மேட்டு நிலப்பகுதியாகிய கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியில் இத்தகையப் பணிகளைக் காண்பது அறிது. மேலும் பெரிய மன்னர்களின் நேரடி கவனத்தை இப்பகுதி பெறவில்லை. சங்க காலம் முதலே குறுநிலத் தலைவர்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுகூட இப்பகுதியை எந்த விஜயநகர மன்னர் ஆண்டார் என்பதைக் குறிப்பிடாமல் அப்போது இப்பகுதியை “கலிலோக சக்கரவர்த்தி அனவேந்தராமப் பெருமாள்” என்னும் தலைவன் ஆண்டுவந்ததாகக்கூறுகிறது. அப்போது பள்ளி இனத்தை சேர்ந்த “கொடுக்கன் மாசாத்தன்” என்பவன் குப்பை நத்தத்தில் குட்டை ஒன்றை சொந்தமாக வெட்டி அந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை வரியாக செலுத்துவேன் என்று இக்கல்வெட்டு வாயிலாக உறுதியளித்துள்ளான். இதற்கு சம்மதம் தெரிவித்து நாட்டவர்களும், சீயாலமுடையாரும் கையெழுத்திட்டுள்ளனர்.இக்கல்வெட்டு காணப்படும் பாறைக்கு 100 அடி முன்னால் ஒரு குட்டை தற்போதும் காணப்படுகிறது. எனவே இந்த கல்வெட்டின் வாயிலாக 400 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டுப் பகுதியான இங்கு குட்டை வெட்டி நீர்வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்க்க இப்பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

மேலும் இக்கல்வெட்டு குறிப்பிடும் குப்பை நத்தம் என்ற பெயரில் 2 கிலோமீட்டர் தொலைவில் ஊர் ஒன்று உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரமும் குப்பைநத்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததை இக்கல்வெட்டு வாயிலாக தெரிந்துக் கொள்கிறோம். எயில்நாடு என்னும் பகுதி கிருஷ்ணகிரி வட்டத்தை குறிப்பதாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் இக்கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை வட்டத்தின் இப்பகுதியும்  எயில் நாட்டிற்குள் இருந்ததை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இக்கல்வெட்டு ஆய்வின்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலர் தமிழ்செல்வன், ஆசிரியர் பாலாஜி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 



















ஆனந்தூர் நடுகற்கள்




ஆனந்தூரில் மூன்று அரிய நடுகற்கள் கண்டுபிடிப்பு:
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து ஊத்தங்கரை வட்டத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆனந்தூர் பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் ஆனந்தூரில் அண்மையில் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தொன்மையியல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது: 
தமிழகத்தின் தொன்மையான தமிழி எழுத்துடன் கூடிய நடுகற்கள் தேனி மாவட்டம், புலி மான் கொம்பை மற்றும்  புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டறியப்பட்டிருந்தாலும் அவைகளில் உருவங்கள் இல்லை. வீரர்களின் உருவங்களோடு கூடிய நடுகற்கள் தமிழகத்தின் செங்கம், ஊத்தங்கரை மற்றும் அரூர் ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை யாவும் வட்டெழுத்துடன் கூடிய நடுகற்களாகும். இவை பெரும்பாலும் கனம் குறைந்த கற்பலகையிலும் உருவங்கள் ஆழம் அதிகம் இல்லாமலும் முகம் மற்றும் கால்கள் பக்கவாட்டில் இருக்கும் படியும் ஒரு கையில் வீல் மற்ற கையில் அம்பு அல்லது கத்தி இருக்குமாறும் வடிக்கப்பட்டிருக்கும். சுமார் ஆறாம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் பொதுவாக இப்படித்தான் அமைந்திருக்கும்.  இதனை நாம் கங்க, நுளம்பர் பாணி என்று குறிப்பிடலாம். அதன் பின் சோழர்கள் இப்பகுதியை கைப்பற்றி ஆண்டபோது நடுகற்களின் வடிவம் மாறுபாடு அடைகிறது. அதாவது வீரன் முகம் நேராக நம்மை பார்த்தவாறும் உடல் நேராகவும் கால்கள் மட்டும் நடந்து செல்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். கைகளில் வில் கத்தி அம்பு கேடயம் போன்ற ஆயுதங்கள் இருக்கும். உருவங்கள் பெரிதாயும் நன்கு புடைப்புடனும் வடிக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் கீழே கால்நடைகளோ அல்லது ஊர்வல காட்சியோ காட்டப்பட்டிருக்கும். மேல் பகுதியில் வீரனை தேவதைகள் சொர்க்கத்திற்கு தூக்கிச் செல்வது போல் காட்டப்பட்டிருக்கும். இதுவே விஜய நகரர் காலத்தில் சொர்க்கத்து செல்லும் காட்சி இடம் பெறாமல் இறந்த வீரன் மேலுலகத்தில் சிவ லிங்கம் அல்லது பெருமாளை வழிபடுவது போன்று இருக்கும்.
இங்கு நாம் ஆனந்தூரில் கண்டறிந்துள்ள மூன்று நடுகற்களும் முதலில் சொன்ன நுளம்பர் பாணியிலிருந்து சோழர் கலை பாணிக்கு மாறியதை தெரிந்துக் கொள்ள உதவும் நடுகற்களாகும். முதல் நடுகலில் வீரன் பக்கவாட்டில் திரும்பிய முகத்துடனும் இரண்டாவது நடுகல்லில் முதல் நடுகல்லைப் போலவே உடல் கால்கள் ஆகியவை இருந்தாலும் முகம் மட்டும் நேராக காட்டப்பட்டுள்ளது. எனவே இது சுமார் பத்தாம் நூற்றாண்டில் நடுகற்களின் வடிவம் எப்படி மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. 
அடுத்து மூன்றாவது உள்ள நடுகல் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு சோழர்கால நடுகல்லாகும். இதன் காலத்தை இங்கு காணப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டின் காலமான அதாவது 12 ஆம் நூற்றாண்டு என கூறலாம். இதன் அமைப்பு முன்பு குறிப்பிட்ட சோழர் பாணியில் அப்படியே அமைந்துள்ளது. அதாவது வீரன் நன்கு புடைப்பாக நம்மை பார்த்த முகத்தோடும் கால்கள் திரும்பியும் நிற்கிறார். காலுக்கு கீழே இரண்டு மாடுகள் கட்டப்பட்டுள்ளன. இது அந்த வீரன் கவர்ந்து சென்ற மாட்டினை மீட்கும் சண்டையில் இறந்துபோனான் என்பதைக் குறிக்கிறது. கூடவே ஒரு குதிரையும் தலைகுனிந்து நடந்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் வீரனுக்கு வலது புறம் ஒரு பெண் குடை பிடித்து நிற்பது போல் சிறிய அளவில் காட்டப்பட்டுள்ளது. குதிரையும் குடையும் இவன் ஒரு தலைவன் என்பதைக் குறிக்கின்றன. வீரனுக்கு இடதுபுறம் ஒருவன் விழுந்து கிடப்பது போல் சிறிய அளவிலும் காட்டப்பட்டிருக்கிறான். அதேபோல வீரனின் கால் பகுதியிலும் ஒரு வீரன் விழுந்து கிடக்கிறான் அவன் உடலை ஒரு ஈட்டி துளைத்து செல்வது போல் உள்ளது. எனவே இறந்த தலைவன், தான் இறக்கும் முன்பு நடந்த சண்டையில் இருவரை கொன்றிருக்கிறான் என்பதும் தெரிகிறது.
  மேல் பக்கம், இறந்த வீரனை இரண்டு தேவலோக மகளிர் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. போரில் இறந்த வீரன் சொர்க்கத்துக்கு போவான் என்பது சங்க காலத்திலிருந்தே இருந்துவந்த மக்களின் நம்பிக்கையாகும். எனினும் இது நடுகல்  சிற்பத்தில் சோழர் காலம் முதலே காட்டப்படுகிறது. எனவே இது ஒரு சோழர்கால நடுகல்லுக்கு சிறந்த உதாரணமாகும். இதனோடு ஆனந்தூரிலிருந்து தருமபுரி அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தியுள்ள இரண்டு பெரிய புலிக்குத்தி பட்டான் நடுகற்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை நடுகல் வளர்ச்சியின் மூன்றாம் கட்ட வளர்ச்சியான விஜயநகரக் கால நடுகற்களுக்கு இலக்கணமாய் அமைந்துள்ளன. மேற்குறிப்பிட்ட அனைத்து நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது ஆனந்தூரானது சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் விஜயநகரக் காலம் வரை மிகவும் சிறப்புவாய்ந்த ஊராக விளங்கியதை அறிந்து கொள்ள முடிகிறது மேலும் நடுகல் வரலாற்றில் அதன் வடிவம் எப்படி எல்லாம் காலப்போக்கில் மாறி வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நடுகற்கள் மிகவும் துணை புரிகின்றன என்றால் மிகையாகாது. எனவே தமிழக நடுகல் வரலாற்றினை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த நடுகற்கள் மிகவும் முக்கியமானவைகளாகும்  என்று குறிப்பிட்டார். இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பாலாஜி, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களும் வேடியப்பன் கோயில்களும் என்ற தலைப்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் சினேகா, ஆனந்தூரைச் சேர்ந்த, சரவணன், முருகாநந்தம், நாகராஜ், கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்


Uploading: 3579575 of 3579575 bytes uploaded.

Uploading: 4356167 of 4356167 bytes uploaded.

Uploading: 4327880 of 4327880 bytes uploaded.

















ஆனந்தூர்

மரிமானப்பள்ளி செல்லப்பன் கோயில் நடுகல்

 











வாளை ஏன் இப்படி நடுவில் பிடித்தான் - ஆனந்தூர் -- அம்மன் கோயில்பதி - நடுகல்: -கிருஷ்ணகிரி நடுகல் மாவட்ட வரலாறு. Why did he hold the sword in the middle like this? - Anandur — Amman Koyilpathi — Hero Stone: - Krishnagiri Hero Stone District History

  இது பற்றி கல்வெட்டு தமிழக தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் அவர்களின் விளக்கம் தமிழகத்தின் அரிதான நடுகல் ...