Wednesday, 14 May 2025

தமிழகத்தின் முதலாவது ஏறுதழுவல் நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

#ஜல்லிக்கட்டு #ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களால் மிகவும் போற்றப்பட்டுவந்ததை சங்க இலக்கியங்கள் சிறப்பித்துப் பேசுகின்றன. இன்னும் சொல்லப்போனால் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி நாகரீக காலத்திலேயே இவ்விளையாட்டு இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் கால்நடைகளே முக்கிய செல்வமாகக் கருதப்பட்டன. பயிர்த்தொழில், போக்குவரத்து மற்றும் உணவுப்பொருள் என அனைத்துக்கும் மக்கள் கால்நடைகளையே பெரிதும் சார்ந்து வாழ்ந்தனர். எனவே ஏறுதழுவுதல், ஆநிரைக் கவர்தல், ஆநிரை மீட்டல் என தமிழர் வாழ்வியலில் இரண்டரக் கலந்துவிட்டவை கால்நடைகள். அக்காலத்தில் காளையை அடக்கும் இளைஞனே மாவீரனாகக் கருதப்பட்டான். இவ்வளவு சிறப்புமிக்க ஏறுதழுவுதலை சங்க இலக்கியங்கள் போற்றினாலும் அதுகுறித்த நடுகல் தடயங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஆத்தூர் கருமந்துரையிலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு வீரன் எருது விளையாடி பட்டான் எனக் குறிப்பிடுகிறது. மற்றொரு ஏறுதழுவும் நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் அருகே கிடைத்துள்ளது. இதனையடுத்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் என்ற ஊரில் ஒரு ஏறுதழுவும் நடுகல்லை கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து பாறை ஓவிய ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமாரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: காடுகளும் மலைகளும் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகியவற்றைக் குறிக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களும், வரலாற்றுக்கால நடுகற்களும் ஏராளமாய் கிடைத்தபோதும் தனிச்சிறப்புவாய்ந்த ஏறுதழுவும் நடுகல் அறியப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அகரம் என்ற ஊரின் தென்னந்தோப்பில் இந்த அரியவகை ஏறுதழுவும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்நடுகல் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும். காளையானது பக்கவாட்டில் முன்னங்காலை தூக்கி ஓடுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு காளையின் முன்னங்காலில் தனது கால்களை பிண்ணிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த ஆய்வுப்பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் தலைவர் நாராயண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சரவணகுமார்ராமச்சந்திரன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக அப்பள்ளி மாணவர்கள் சிலரை களப்பயணமாக இந்நடுகல் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று தொன்மை வரலாற்றினைக்கூறும் இதுபோன்ற நடுகற்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் அருங்காட்சியக காப்பாட்சியர் விளக்கி கூறினார்.