ஆனந்தூரில் மூன்று அரிய நடுகற்கள் கண்டுபிடிப்பு:
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து ஊத்தங்கரை வட்டத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆனந்தூர் பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் ஆனந்தூரில் அண்மையில் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தொன்மையியல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
தமிழகத்தின் தொன்மையான தமிழி எழுத்துடன் கூடிய நடுகற்கள் தேனி மாவட்டம், புலி மான் கொம்பை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டறியப்பட்டிருந்தாலும் அவைகளில் உருவங்கள் இல்லை. வீரர்களின் உருவங்களோடு கூடிய நடுகற்கள் தமிழகத்தின் செங்கம், ஊத்தங்கரை மற்றும் அரூர் ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை யாவும் வட்டெழுத்துடன் கூடிய நடுகற்களாகும். இவை பெரும்பாலும் கனம் குறைந்த கற்பலகையிலும் உருவங்கள் ஆழம் அதிகம் இல்லாமலும் முகம் மற்றும் கால்கள் பக்கவாட்டில் இருக்கும் படியும் ஒரு கையில் வீல் மற்ற கையில் அம்பு அல்லது கத்தி இருக்குமாறும் வடிக்கப்பட்டிருக்கும். சுமார் ஆறாம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் பொதுவாக இப்படித்தான் அமைந்திருக்கும். இதனை நாம் கங்க, நுளம்பர் பாணி என்று குறிப்பிடலாம். அதன் பின் சோழர்கள் இப்பகுதியை கைப்பற்றி ஆண்டபோது நடுகற்களின் வடிவம் மாறுபாடு அடைகிறது. அதாவது வீரன் முகம் நேராக நம்மை பார்த்தவாறும் உடல் நேராகவும் கால்கள் மட்டும் நடந்து செல்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். கைகளில் வில் கத்தி அம்பு கேடயம் போன்ற ஆயுதங்கள் இருக்கும். உருவங்கள் பெரிதாயும் நன்கு புடைப்புடனும் வடிக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் கீழே கால்நடைகளோ அல்லது ஊர்வல காட்சியோ காட்டப்பட்டிருக்கும். மேல் பகுதியில் வீரனை தேவதைகள் சொர்க்கத்திற்கு தூக்கிச் செல்வது போல் காட்டப்பட்டிருக்கும். இதுவே விஜய நகரர் காலத்தில் சொர்க்கத்து செல்லும் காட்சி இடம் பெறாமல் இறந்த வீரன் மேலுலகத்தில் சிவ லிங்கம் அல்லது பெருமாளை வழிபடுவது போன்று இருக்கும்.
இங்கு நாம் ஆனந்தூரில் கண்டறிந்துள்ள மூன்று நடுகற்களும் முதலில் சொன்ன நுளம்பர் பாணியிலிருந்து சோழர் கலை பாணிக்கு மாறியதை தெரிந்துக் கொள்ள உதவும் நடுகற்களாகும். முதல் நடுகலில் வீரன் பக்கவாட்டில் திரும்பிய முகத்துடனும் இரண்டாவது நடுகல்லில் முதல் நடுகல்லைப் போலவே உடல் கால்கள் ஆகியவை இருந்தாலும் முகம் மட்டும் நேராக காட்டப்பட்டுள்ளது. எனவே இது சுமார் பத்தாம் நூற்றாண்டில் நடுகற்களின் வடிவம் எப்படி மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
அடுத்து மூன்றாவது உள்ள நடுகல் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு சோழர்கால நடுகல்லாகும். இதன் காலத்தை இங்கு காணப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டின் காலமான அதாவது 12 ஆம் நூற்றாண்டு என கூறலாம். இதன் அமைப்பு முன்பு குறிப்பிட்ட சோழர் பாணியில் அப்படியே அமைந்துள்ளது. அதாவது வீரன் நன்கு புடைப்பாக நம்மை பார்த்த முகத்தோடும் கால்கள் திரும்பியும் நிற்கிறார். காலுக்கு கீழே இரண்டு மாடுகள் கட்டப்பட்டுள்ளன. இது அந்த வீரன் கவர்ந்து சென்ற மாட்டினை மீட்கும் சண்டையில் இறந்துபோனான் என்பதைக் குறிக்கிறது. கூடவே ஒரு குதிரையும் தலைகுனிந்து நடந்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் வீரனுக்கு வலது புறம் ஒரு பெண் குடை பிடித்து நிற்பது போல் சிறிய அளவில் காட்டப்பட்டுள்ளது. குதிரையும் குடையும் இவன் ஒரு தலைவன் என்பதைக் குறிக்கின்றன. வீரனுக்கு இடதுபுறம் ஒருவன் விழுந்து கிடப்பது போல் சிறிய அளவிலும் காட்டப்பட்டிருக்கிறான். அதேபோல வீரனின் கால் பகுதியிலும் ஒரு வீரன் விழுந்து கிடக்கிறான் அவன் உடலை ஒரு ஈட்டி துளைத்து செல்வது போல் உள்ளது. எனவே இறந்த தலைவன், தான் இறக்கும் முன்பு நடந்த சண்டையில் இருவரை கொன்றிருக்கிறான் என்பதும் தெரிகிறது.
மேல் பக்கம், இறந்த வீரனை இரண்டு தேவலோக மகளிர் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. போரில் இறந்த வீரன் சொர்க்கத்துக்கு போவான் என்பது சங்க காலத்திலிருந்தே இருந்துவந்த மக்களின் நம்பிக்கையாகும். எனினும் இது நடுகல் சிற்பத்தில் சோழர் காலம் முதலே காட்டப்படுகிறது. எனவே இது ஒரு சோழர்கால நடுகல்லுக்கு சிறந்த உதாரணமாகும். இதனோடு ஆனந்தூரிலிருந்து தருமபுரி அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தியுள்ள இரண்டு பெரிய புலிக்குத்தி பட்டான் நடுகற்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை நடுகல் வளர்ச்சியின் மூன்றாம் கட்ட வளர்ச்சியான விஜயநகரக் கால நடுகற்களுக்கு இலக்கணமாய் அமைந்துள்ளன. மேற்குறிப்பிட்ட அனைத்து நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது ஆனந்தூரானது சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் விஜயநகரக் காலம் வரை மிகவும் சிறப்புவாய்ந்த ஊராக விளங்கியதை அறிந்து கொள்ள முடிகிறது மேலும் நடுகல் வரலாற்றில் அதன் வடிவம் எப்படி எல்லாம் காலப்போக்கில் மாறி வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நடுகற்கள் மிகவும் துணை புரிகின்றன என்றால் மிகையாகாது. எனவே தமிழக நடுகல் வரலாற்றினை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த நடுகற்கள் மிகவும் முக்கியமானவைகளாகும் என்று குறிப்பிட்டார். இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பாலாஜி, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களும் வேடியப்பன் கோயில்களும் என்ற தலைப்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் சினேகா, ஆனந்தூரைச் சேர்ந்த, சரவணன், முருகாநந்தம், நாகராஜ், கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்



ஆனந்தூர்
No comments:
Post a Comment