Tuesday, 3 March 2026

விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார்

வெங்கடாபுரம் கல்வெட்டு இடம்: ஊத்தங்கரை வட்டம், நடுப்பட்டி பஞ்சாயத்து, வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளிய மரத்தடியில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு. காலம்: பொ.ஆ. 17ம் நூற்றாண்டு. youtube link
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார் ஆட்சியின் கீழ் https://youtu.be/SAFLktTXPMg
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாபுரத்தில் அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு இம்மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டத்தில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது கெண்டயனூர் லட்சுமணன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளியமரத்தின் அடியில் உள்ள பாறையில் சுமார் 400 ஆண்டுகளுக்குமுற்பட்ட காலத்தை சேர்ந்த கல்வெட்டை கண்டறிந்து படித்து ஆய்வு செய்யப்பட்டது. இது ஒரு அரிய கல்வெட்டு என்று கூறிய தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியருமான கோவிந்தராஜ் மேலும் இதுபற்றி கூறியதாவது: தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற பெருவேந்தர்கள் காலத்தில் பல ஏரிகளை வெட்டி நீர் பாசனத்தை பெருக்கி விவசாயம் வளர்க்கப்பட்டதை பல கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். ஆனால் மேட்டு நிலப்பகுதியாகிய கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியில் இத்தகையப் பணிகளைக் காண்பது அறிது. மேலும் பெரிய மன்னர்களின் நேரடி கவனத்தை இப்பகுதி பெறவில்லை. சங்க காலம் முதலே குறுநிலத் தலைவர்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுகூட இப்பகுதியை எந்த விஜயநகர மன்னர் ஆண்டார் என்பதைக் குறிப்பிடாமல் அப்போது இப்பகுதியை “கலிலோக சக்கரவர்த்தி அனவேந்தராமப் பெருமாள்” என்னும் தலைவன் ஆண்டுவந்ததாகக்கூறுகிறது. அப்போது பள்ளி இனத்தை சேர்ந்த “கொடுக்கன் மாசாத்தன்” என்பவன் குப்பை நத்தத்தில் குட்டை ஒன்றை சொந்தமாக வெட்டி அந்த நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்து அதில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை வரியாக செலுத்துவேன் என்று இக்கல்வெட்டு வாயிலாக உறுதியளித்துள்ளான். இதற்கு சம்மதம் தெரிவித்து நாட்டவர்களும், சீயாலமுடையாரும் கையெழுத்திட்டுள்ளனர்.இக்கல்வெட்டு காணப்படும் பாறைக்கு 100 அடி முன்னால் ஒரு குட்டை தற்போதும் காணப்படுகிறது. எனவே இந்த கல்வெட்டின் வாயிலாக 400 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டுப் பகுதியான இங்கு குட்டை வெட்டி நீர்வளத்தைப் பெருக்கி விவசாயத்தை வளர்க்க இப்பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. மேலும் இக்கல்வெட்டு குறிப்பிடும் குப்பை நத்தம் என்ற பெயரில் 2 கிலோமீட்டர் தொலைவில் ஊர் ஒன்று உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரமும் குப்பைநத்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததை இக்கல்வெட்டு வாயிலாக தெரிந்துக் கொள்கிறோம். எயில்நாடு என்னும் பகுதி கிருஷ்ணகிரி வட்டத்தை குறிப்பதாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் இக்கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை வட்டத்தின் இப்பகுதியும் எயில் நாட்டிற்குள் இருந்ததை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார். இக்கல்வெட்டு ஆய்வின்போது கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு செயலர் தமிழ்செல்வன், ஆசிரியர் பாலாஜி , மூ.சினேகா முனைவர் பட்ட ஆய்வாளர் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
map
https://maps.app.goo.gl/opqtQ93EZMNY5E8N6 00000

No comments:

Post a Comment

விஜயநகர கால அரிய நீர்பாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு. எயில்நாட்டு - கல்லோகச் சக்கரவர்த்தி அனவேந்தார்

வெங்கடாபுரம் கல்வெட்டு இடம்: ஊத்தங்கரை வட்டம், நடுப்பட்டி பஞ்சாயத்து, வெங்கடாபுரம் பழனி கவுண்டர் என்பவரது நிலத்தில், புளிய மரத்தடியில் உள்ள...