Tuesday, 2 June 2026

எச். செட்டிப்பள்ளி -(கெலமங்கலம்)

 







கெலமங்கலம் அருகே

16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேல் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு

ஓசூர், டிச. 24: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே எச். செட்டிப்பள்ளி கிராமத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லை அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

கெலமங்கலம் - பாரந்தூர் சாலையில் உள்ள எச். செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான திம்மராயப்பா கோயிலின் உட்பகுதியில் நடுகல் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அறம் கிருஷ்ணன், மஞ்சுநாத் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து அறம் வரலாற்று மையத்தின் தலைவர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது:

இந்த நடுகல்லானது சுவர்க்க வகை நடுகல்லாகும். இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ள நடுகல்லின் கீழ் பகுதியில் வேல் வீசும் வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவனது தலைக்கு மேல் வெண்கொற்றக் குடையும், வலது கரத்தில் அரிவாள் போன்ற கத்தியும், இடதுகரத்தில் கூர்மையான வேலும், இடையில் குறுவாளும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த வேல் வீரன் ஒரு குறுநில அரசனாக இருக்க வேண்டும். அதனால்தான் மற்றொரு வீரன் வெண்கொற்றக் குடையினைப் பிடித்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலதுபுறம் பெரிய உருவமாக அவனது மனைவியின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பெண்ணின் சிற்பமும் அழகாக நேர்த்தியாக ஆபரணங்கள், ஆடையுடன் செதுக்கப்பட்டுள்ளது.

வீரனின் இடது பக்கம் இரண்டு போர் வீரர்கள் உள்ளனர். ஒரு வீரனின் கரத்தில் கேடயமும் வாளும், மற்றொரு வீரனின் கரத்தில் அம்பு வில்லும் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போர் வீரர்களும் இந்த குறுநில அரசனுக்காகப் போரிட்டு உயிர்நீத்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் நடுகல் வீரனின் கால்களுக்கு இடையில் ஒரு சிற்பம் வணங்குவது போல செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லில் உள்ள குறுநில அரசன் வைணவத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த நடுகல்லின் மேற்பகுதியில் வைணவத்தைச் சேர்ந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இது சுவர்க்க வகை நடுகல் என்பதால் மேற்பகுதி முழுவதும் அதற்கான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த நடுகல் சிற்பம் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயிலின் உட்பகுதியில் இருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் கோயில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனே பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.

(படத்தின் கீழுள்ள குறிப்பு) கெலமங்கலம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள வேல் வீரனின் நடுகல் சிற்பம்.

(அடிக்குறிப்பு) தினமணி Sat, 25 December 2021 https://epaper.dinamani.com/c/65179147


No comments:

Post a Comment