Tuesday, 2 June 2026

ஓசூர் சந்திர சூடேஷ்வர் கோயில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓய்சாள அரசன் இரண்டாம்வீர நரசிம்மனின் புதிய கல்வெட்டு

 




ஓசூர் சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்காக தற்போது புனரமைக்கப்பட்டு வரும் வேளையில் ,13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓய்சாள அரசன் இரண்டாம்வீர நரசிம்மனின் புதிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது

கோயிலின் செயல் அதிகாரி திரு.இராஜரத்தினம் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம்கிருஷ்ணன் தலைமையில் பிரியன், வீரமுத்து,இராசு,மணி, ,ஆகியோர் ஒன்றிணைந்து செய்யப்பட்ட களஆய்வில் இந்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனர்.

தொழில் நகரமான ஒசூர், வரலாற்றிலும் பல முக்கிய தடயங்களை வைத்துள்ளது.கி.பி.பத்தாம் நூற்றாண்டு வாக்கில் ஒசூரின் பெயர் செவிடபாடி என்றும் பிறகு சூடவாடி.என்றும், பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் முரசு நாடு என்றும் அதன் பிறகு காலப்போக்கில் 16 நூற்றாண்டுக்கு பிறகே ஓசூர் என்று பெயர் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இன்றும் கூட தேர்பேட்டையில் இருக்கும் ஓரு பள்ளி கூடத்தில் சூடவாடி என்ற பெயரை பார்க்கலாம்.மேலும் தேர்பேட்டை என்று பரவலாக அழைக்கப்படும் இவ்விடத்தில்தான் ஓவ்வொரு ஆண்டும் மாசிமாதம் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது.இன்றும் தேரோடும் வீதிகளாக இருப்பது சூடவாடியின் வீதிகள்தான்.

இக்கோயிலின் மூலவரை இப்போது சந்திரசூடேஸ்வரர் என்று அழைக்கிறோம், ஆனால் பழையபெயர் செவிடைநாயனாராகும்.எல்லா கல்வெட்டுகளிலும் செவிடைநாயனார் என்றே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இக்கோயிலுக்கு கொடுக்கப்பட் கொடைகள் பற்றிய செய்திகள், ஓசூர் மலைமீதிருக்கும் பெருமாள் கோயில் கல்வெட்டிலும்,பாகலூர் அருகில் மேல்சூடாபுரத்தில் இருக்கும் ஏகம்பரநாதர் சிவன் கோயில் கல்வெட்டிலும்,பெண்ணேஸ்வரர் கோயில் கல்வெட்டிலும் குறிப்பு வருகிறது.

சந்திர சூடேஸ்வரர் எனப்படும் இக்கோயிலில் மொத்தம் 26 தமிழ் கல்வெட்டுகளை தொல்லியல் துறை 1974 ஆம் வருடம் பதிவு செய்திருக்கிறது. கங்கர்கள்,நுளம்பர்கள்,சோழர்கள்,ஓய்சாளர்கள் விஜநகரபேரரசு ஆகிய அரசுகளின் காலத்தில் இக்கோயில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.இராசேந்திரசோழனின் 14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் விக்கிரம சோழனை குறிப்பிடுகிறது

பழமையான கோயில்

இக்கோயிலின் பழைமையை உறுதி செய்ய இரண்டு செய்திகளை பார்க்கலாம்.கங்கர்கள் பத்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஓசூர் பகுதியை ஆட்சி செய்ததின் அடையாளமாக ஓசூரின் இராமநாயக்கன் ஏரியில் உள்ள காவியியம்மன் கற்சிலையில் கங்கமன்னன் இரண்டாம் மாற சிம்மனின் ஆட்சிகால கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.இது பத்தாம்நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும்.மேலும் இக்கோயிலின் உட்புறத்தில் உள்ள உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள்,சூரியன்,திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்று கன்னட ஆய்வாளர் தேவரகொண்டாரெட்டி என்பவர் தனது தலைக்காடு கங்கர்களின் கோயில் ஓர் ஆய்வு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அர்த்தமண்டப தூண்களும் கங்கர்களின் கலையை ஒத்திருப்பதை அறியமுடிகிறது.

இரண்டாவது.சோழ அரசன் இராஜராஜசோழனின் மகன் முதலாம் இராஜேந்திர சோழனின் (கிபி.1012-1044) தூண் கல்வெட்டும்,முதலாம்குலோந்தங்க சோழனின்(கி.பி.1070-1120) ஆட்சிக்கால படி கல்வெட்டும் இக்கோயில் எவ்வளவு பழைமையான என்பதை அறிய உதவுகிறது.இக்கோயிலின் மிகவும் பழைமையான கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழனின் கி.பி.1018 ல் முதல் திருச்சுற்றில் தெற்குவாயிலின் அருகேயுள்ள துலாபாரத் தூணில் செதுக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.இதே போல் முதலாம்குலோந்துங்க சோழனின் பத்தாம் ஆட்சியாண்டு கல்வெட்டு முதல் திருச்சுற்று சுவரில் (கி.பி.1080)காணமுடிகிறது.இவ்வாறான சான்றுகளை வைத்து பார்க்கும் போது இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை அறியமுடிகிறது

தென்பகுதியை நோக்கி வந்த முதல் ஓய்சாள அரசன் வீரநரசிம்மன் என்றழைக்கப்படும் இரண்டாம் வீர நரசிம்மன்(கி.பி.1220-1238) ஆவான்.இவனுக்குப்பிறகு,வீரசோமேஸ்வரன்,இவரின் மகன்களான வீர ராமநாதன்,வீரவீசுவநாதனும்,கடைசியாக வீர வல்லாளனும் ஆட்சி செய்துள்ளார்கள்.இக்கோயிலில் பல மன்னர்களின் கல்வெட்டுகள் இருந்தாலும் இந்த முக்கியதுவம் பெறுவதற்கான காரணம் ஓய்சாளர்களின் முதல் கல்வெட்டாகும்.இம்மன்னன்தான், சோழ அரசன் மூன்றாம் இராஜராஜனை காடவ குல கோப்பெருஞ்சிங்கன் சிறைப்படுத்தியபோது அவனிடமிருந்து சோழனை மீட்டுவந்து, தனது பெண்ணையும் மணம்செய்து வைத்தவர்.

கல்வெட்டு செய்தி

1,

2, . . செல்லாநின்ற

3. , ,சம்வத்திரத்து

4. ஆடிமாதம்பத்தாந்தி

5. ம்நாள்ஸ்வத்திஸ்ரீதி(ரி)

6. வூ(தா)ன ச்சக்கரவத்திகள்ஸ்ரீபெ

7. சளவீரநரசிங்கமகாதெ

8. வர்சாதொரசமுத்திர

9. த்திலெஎழுந்தருளிஇரு

10. துபிரிதிவிராஜ(ம்) ப ன்னி

11. அருளாநிற்கசிக்ககங்

12. கவாடிநாட்டுக்கு. .ஸ்ரீ

13. மனுமகாபிரவூதாண

14. சிய, , ,குடுத்தொம்

15. சே(விகு)டைநாயனார்கு

16. (எழுத்த)


No comments:

Post a Comment