Sunday, 19 April 2026

அத்திமுகம் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட கற்சிலைகள்.




அத்திமுகம் அருகே கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

(படத்தின் கீழுள்ள குறிப்பு): கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட கற்சிலைகள்.

கிருஷ்ணகிரி, செப். 25: அத்திமுகம் கிராமத்தில், புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று கற்சிலைகளை, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் சூளகிரி வட்டாட்சியர் ஒப்படைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள அத்திமுகம் கிராமத்தில், கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது, பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகளும், ஒரு பீடமும் கண்டெடுக்கப்பட்டன. அதில், பைரவர் சிலை 2.7 அடி உயரமும், சண்டிகேஸ்வரர் சிலை 2.4 அடி உயரமும், துர்க்கை சிலை 3 அடி உயரமும் உள்ளன.

தகவலறிந்த சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல் சிலைகளைப் பார்வையிட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு ஒப்புதலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்படைத்தார். வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், அருங்காட்சியகப் பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

சூளகிரி வட்டாட்சியரால் ஒப்படைக்கப்பட்ட கற்சிற்பங்கள் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும். இவற்றில் ஆங்காங்கே லேசான பின்னங்கள் காணப்படுகின்றன என்றாலும் மிகுந்த கலைநயத்துடன் உள்ளன. பைரவர் பின்னால் நாய் காட்டப்பட்டுள்ளது. அவரது பின் கைகளில் உடுக்கை, பாசக்கயிறு உள்ளது. முன் கைகளில் சூலம், பிச்சைப்பாத்திரம் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் சுகாசன அமர்வில் உள்ளது. இவர் வலது கையில் கோடரியையும், இடது கையை கடக முத்திரையாகவும் வைத்துள்ளார். துர்க்கை சிற்பம் எருமைத் தலைமீது நேராய் நின்ற வண்ணம் உள்ளது. பின் கைகளில் சக்கரம், சங்கும், முன்கைகளில் வலது கை அபய முத்திரைக் காட்டியும், இடது கையை தொடைமீதும் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிற்கால சோழர்களின் கலைக்கு இந்த சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் என அவர் தெரிவித்தார்.







 

No comments:

Post a Comment

அத்திமுகம் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட கற்சிலைகள்.

அத்திமுகம் அருகே கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு (படத்தின் கீழுள்ள குறிப்பு): கிருஷ்ணகிரி அரசு...