Sunday, 1 December 2024

அங்கனப்பற்று - மகராசகடை மேகலசின்னம்பள்ளி (கரகூர் ) கத்திகுண்டு கல்வெட்டு INSCRIPTIONS MEKALACHINNAMPALLI

கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு சார்பில் 19.10.2020 திங்கட்கிழமை இன்றைய களப்பயணமாக மேகலசின்னம்பள்ளி போய் ஏற்கனவே கண்டு வந்த கல்வெட்டு குறித்த முழுமையான வீடியோ பதிவு செய்யலாம்னு தீர்மானிக்கப்பட்டது. காலை 11.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆஸ்தான போட்டோகிராபர் விஜயகுமார் இவர்களோடு மாருதி மனோகரன் ஆகிய நானும் இணைந்து இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டோம்.. குப்பம் சாலை வழியாக சென்று, வரட்டனப்பள்ளி சென்றதும் தம்பி ராமச்சந்திரன் எங்களோடு இணைந்து கொள்ள நால்வரும், மகாராஜ கடை வழியாக செல்ல ஆரம்பித்தோம். புஸ்பகிரி, பெலவர்த்தி தாண்டி கரகூர் கிராமம் அருகே மேகலசின்னம்பள்ளி செல்லும் சாலையில் திரும்பி 100 மீட்டர் தொலைவு சென்றதும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் கை நீட்டி, அதோ அங்கே தெரியும் குண்டு பாறைதான் நம் இலக்கு என்றார். மழைக்கால மேகம் வந்து, மடி ஊஞ்சல் தாலாட்ட, மழைமேகம் மூடியிருக்க, சில்லென்ற காற்று சிலுசிலுக்க, பாதையின் இருமருங்கும் மரங்கள் சூழ இடையே தார்சாலை.... ரம்யமாய்.... கண்ணுக்கு குளுமையாய், உடலுக்கு குளிர்ச்சியாய், மகிழ்வோடு எங்கள் படைக்களன்களோடு குன்றை நோக்கி சென்றோம்.... வயல் காட்டில் கால் பதித்து. சுற்றிலும் பல்வேறு மரங்கள் கிழக்கே பெரும்பாறை இரண்டு மரங்கள் சூழ, மேற்கே நாங்கள் காண வந்த சுமார் 10 அடி உயர மண்டையோட்டின் அடையாளத்தோடுகண்முன்னே கத்திகுண்டு பாறை. பாறை மேல் ஏற வசதியில்லை, ஆனால் அருகே பட்டும், துளிர்த்தும் இருந்த வேப்பமரம் எங்களுக்கு ஏணியாக இருந்தது. கரம் கோர்த்து மரம் பிடித்து, பாறையில் ஏறினால் காற்று எந்தப்பக்கம் தள்ளுமோ என்னும் வகையில் தஞ்சாவூர் பொம்மை போல் ஆடியபாதங்கள். ஒருவழியாக கல்வெட்டு படியெடுக்கும் வகையில்.... பவுடர் பூச்சு போட ஆரம்பிச்சா..... லைட்டா ஆரம்பிச்சா.... மழைத்தூறல்.... சாரலாய்... ஆச்சுடா கூச்சல்.... வந்த வேலை ஆகாது போலன்னு நினைக்கும் வேளை வருணபகவான் அருள் புரிந்துவிட்டார். கிழக்கும் மேற்குமாய் எங்கள் ஆவணப்படுத்தும் பணி போட்டோவிலும் வீடியோவிலும் பதிய வைத்துக்கொண்டோம். இப்போ வரேன்..... கல்வெட்டின் சாராம்சம் என்னான்னு சொல்ல. இந்த கல்வெட்டு ஆண்டு சரியாக 1375. கல்வெட்டில் உள்ள குறிப்பு யாதெனில்.... வேப்பம்பள்ளியான (வேப்பனப்பள்ளி) செடில சமுத்திரத்தை சார்ந்த நன்செய், புன்செய் நிலங்களை பொற்புறத்து தேவ பெருமாளும் நின்பை நாயனாரும் உள்ளிட்ட மகாப் பெருமக்களும், வேதம் ஓதுவார்க்கும் பங்கிட்டு தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதில் அங்கனப்பற்று (அங்கிநாயனப்பள்ளி) நாட்டவரும், துவாரபதி வேளாளரும் ராமகாமிண்டரும் இக்கல்வெட்டில் உள்ளது. ஒருவழியாக வந்த வேலை முடிந்தது, புறப்படலாம்னு மெதுவா வண்டிகிட்ட வந்து நின்னா, கிழக்கால தூரத்துல மழை தூறல் தெரியுது. அப்போ அந்தப்பக்கம் போனா மழையில் மாட்டிக்குவோம்னு சட சடன்னு வண்டிய எடுத்துகிட்டு கிழக்குப்பக்கமா மேகலசின்னம்பள்ளி வழியா, கிருட்டினகிரி நோக்கி விரைந்தோம்.... சாரலில் நனைந்தபடி. பத்திரமாக கிருட்டினகிரி வந்து சேர்ந்தாச்சு. போய் வந்த சங்கதி உங்களுக்கும் சொல்லியாச்சு. அப்புறம் என்ன போய் வந்த காட்சிகளின் சாட்சிகளை பாருங்க.... சூப்பரா இருக்கும். https://youtu.be/PZFMSLFhlng

No comments:

Post a Comment

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...