கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆவணபடுத்தும் குழுவும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்கட்சியகமும் இணைந்து தொடர்ந்து பல்வேறு இடங்களை கள ஆய்வு செய்துவருகிறது. வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில் அண்மையில் பந்திகுறி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை கண்டறிந்து வாசிக்கப்பட்டது.இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பந்திகுறிக்கு மேற்கு தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளைக்கொண்ட இந்த நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. வீரவல்லாளனின் மகன் விருதுகோவன் இலக்குமி நாயக்கர் இப்பகுதியை ஆண்டபோது அவரது ஆட்சி சிறக்கவேண்டி குந்தாணியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு பந்திகுறியில் உள்ள நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு இரண்டு முக்கிய வரலாற்று செய்திகளை நமக்கு தெரிவிக்கிறது. முதலாவதாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பந்திகுறி என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பன்றிகுறுக்கி என்று அழைக்கப்பட்டதாக இக்கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.மேலும் ஒய்சாள மன்னன் வீரவல்லாளனின் பெயர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வீரவல்லாளன் கி.பி.1343ல் கொல்லப்பட்டதாகவும் அதன்பின் அவனது மகன் மூன்று ஆண்டுகள் அரசாண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவனுக்குப் பின் விஜயநகர அரசோடு இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கி.பி.1368ம் ஆண்டை சேர்ந்த பன்றிகுறி கல்வெட்டு வீரவல்லாளனின் மகன் பெயர் விருதுகோவன் இலக்குமிநாயக்கர் என்றும் இவனது வாளும் தோளும் நன்றாக இருக்கவேண்டி தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. எனவே இக்கல்வெட்டு வாயிலாக ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும் தொடர்ந்து குறுநிலத்தலைவர்களாக விஜயநகரர் ஆட்சிக்காலத்திலும் இப்பகுதியை ஆண்டுவந்துள்ளது தெரியவருகிறது. மேலும் வீரவல்லாளன் என்ற பெயரில் சுமார் 150 ஆண்டுகள் கழித்து விஜயநகரப் பேரரசின் இறுதிக் காலத்தில் இப்பகுதியை ஆண்டதாக முறையே கிபி.1505ம் ஆண்டை சேர்ந்த நெடுசால் கல்வெட்டு மற்றும் 1511ல் வெட்டப்பட்ட கொத்தூர் கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நம்மோட கண்டறிதல் விக்கிபிடியாவில்
youtube link -https://www.youtube.com/watch?v=wjAW5scb4ig
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன் -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
No comments:
Post a Comment