விஜயநகரர் கால அரிய ஏரிக் கல்வெட்டு கண்டுபிடிப்பு’
அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் சங்கம் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து பர்கூரை அடுத்த குட்லட்டி என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது இவ்வூரில் உள்ள ஶ்ரீ கோபால கிருஷ்ணர் கோயில் 300 வருடத்திற்கு முந்தய மத்வ பிருந்தாவனமாக இருந்துள்ளது தெரியவந்தது. அந்த பழமையின் அடையாளத்தை அப்படியே வைத்து அதை தற்போது கிருஷ்ணன் கோவிலாக கட்டியுள்ளனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தாஜ் என்பவர் அளித்த தகவலின் பேரில் அக் கோயில் அருகே உள்ள வரதப்பன் என்பவரது நிலத்தில் இருந்த கல்வெட்டை படித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
விஜயநகரப் பேரரசை தந்தை இரண்டாம் தேவராயன் ஆண்டபோது அவரது மகன் இம்மடி புக்கராயன் இப்பகுதியை உள்ளடக்கிய முள்வாய் ராஜ்யத்தை ஆளுநராய் இருந்து ஆண்டுவந்துள்ளார். இவரது கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5 கண்டறியப்பட்டுள்ளது. குட்லட்டியில் உள்ள இக்கல்வெட்டு ஸ்ரீமுக ஆண்டில் வெட்டப்பட்டது. இது பொ.ஆ.1393க்கு இணையானதாகும். அப்போது மஹாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது அங்கணப்பற்று என்னும் பகுதியாகும். இப்பகுதியை நாயக்கம் செய்துவந்த மாமிண்டர் கேசையப்பாவை ஈராண்டை என்பவரது மகன் வையணந்தார் என்பவர் ஏரி ஒன்றை ஏற்படுத்தி அதனை பாதுகாக்கும் பொருட்டு செல்லப்பிள்ளையார் கோயிலைக் கட்டி அக்கோயிலுக்கு 5 குளகம் விதை விளைகின்ற அளவு கொல்லையையும், 6 குளக விதை விளைகின்ற அளவு கழனியும், எண்ணை ஆட்டும் செக்கு ஆகியவற்றை தானமாக வழங்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுக் கூறுகிறது. “சாற்றை” ஏரி என்ற சொல் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாற்றை ஏரி என்பது ஏரியின் ஒரு பகுதியில் சேறு மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு தடுப்பணை போன்று அமைத்து அதனை மீன் பிடிக்கப் பயன்படுத்துவதாகும். இப்போதும் கிருஷ்ணகிரி பகுதி ஏரிகளில் இவ்வமைப்பு காணப்படுகிறது. இச்சொல் தமிழகத்திலேயே இக்கல்வெட்டில்தான் முதன் முறையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவ்வூரை ஒட்டி அந்த ஏரி காணப்படுகிறது.
மேலும் இக்கல்வெட்டு செக்கினை “முக்கை செக்கு” எனக் குறிக்கிறது. வழக்கமான இரண்டு கம்புகளோடு, எண்ணை ஆட்டுபவர் உட்காருவதற்காக மேலும் ஒரு பலகை அமைத்து உருவாக்கப்பட்ட செக்கினைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் புரிந்துக் கொள்ளலாம். அங்கிருந்த பிள்ளயார் கற்சிற்பம் தற்போது சாலை அருகே உள்ள புதிய கோயிலில் உள்ளது.
இந்த ஆய்வின்போது காப்பாச்சியர் சிவக்குமார் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்க செயலர் தமிழ்செல்வன், துணைச் செயலர் பாலாஜி, சரவணகுமார் ராமச்சந்திரன், டெய்சி ராணி, டேனியல் தீபக், பென்னாகரம் தெய்வம், தர்மகர்த்தா நரசிம்மன், குட்லெட்டி ராஜேந்திரன் மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.













No comments:
Post a Comment