Thursday, 27 March 2025

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்ளிக் கல்வித்துறை, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் ஓசூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல புதிய கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன .சேர சோழ பாண்டியர்கள் முறையே வில், புலி மற்றும் மீன் ஆகியவற்றை தங்களது அரச சின்னங்களாகக் கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிவோம். மன்னர்கள் வெளியிடும் காசுகள் மற்றும் செப்பு பட்டயங்களில் மட்டுமே அவர்களது சின்னங்கள் காணப்படும். கல்வெட்டுகளில் அரச முத்திரைகளை காண்பது அரிதான ஒன்றாகும். வில் சின்னமானது விடுகாதழகிய பெருமானின் குந்துக்கோட்டை, ராயக்கோட்டை போன்ற கல்வெட்டுக்களிலும், மீன் சின்னமானது பாண்டியனின் பெயரில் அமைந்த வீதிப்பெயர் கொண்ட திருவண்ணாமலைக் கல்வெட்டிலும், புலிச்சின்னமானது பெண்ணேஸ்வர மடக் கல்வெட்டிலும் மட்டுமே இதுவரைக் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாய் கண்டறியப்பட்டுள்ள புலிச்சின்னம் குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: சந்திரசூடேஸ்வரர் கோயிலின் தெற்கு நுழைவாயில் வழியாக நுழைந்ததும் வலது புறமாக கோயிலின் பொருட்கள் வைக்கும் அறை உள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்கு பக்க சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் உள்ளன. இவை ஏற்கனவே இருந்த ஒரு கட்டுமானத்தில் இருந்த கற்களக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் அதில் இருந்த கல்வெட்டுகள் துண்டு துண்டாகவும் இடம் மாறியும் சில பகுதிகள் காணாமலும் உள்ளன. அவ்வாறு உள்ள துண்டுகளில் தான் முதலாம் குலோத்துங்க சோழனின் (பொ.ஆ.1070-1120) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இந்த அறையின் இடதுபுறம் இரண்டு கற்களிலும் வலதுபுறம் இரண்டு கற்களிலும் தற்போது உள்ளது சுமார் 90 வரிகளைக்கொண்ட மெய்கீர்த்தியின் ஆங்காங்கே உள்ள 24 வரிகள் மட்டும் இங்கு காணப்படுகின்றன.கல்வெட்டு வரிகளை சுவற்றில் தொடர்ந்து எழுதாமல் இரண்டிரண்டு பத்திகளில் பன்னிரண்டு, பன்னிரண்டு வரிகளில் மடித்து எழுதியுள்ளனர். இதனால் இந்த 24 வரிகளும் இரண்டு பகுதிகளாக ஓரளவிற்கு முழுமையாக கிடைக்கின்றன. ஒவ்வோர் பத்தியின் முடிவிலும் ஒரு விலங்கின் உருவத்தை கீழே புடைப்பு சிற்பமாகக் காட்டியுள்ளனர். அவ்வாறு முதல் பத்தியின் முடிவில் புலியையும், இரண்டாவதின் முடிவில் யானையையும் காட்டியுள்ளனர், 3ம் 4 ம் பத்தி முடிவில் உள்ள யானை மற்றும் உள்ள விலங்கின் உருவமும் தெளிவில்லாமப் உள்ளன. இந்த யானை மற்றும் புலி உருவங்களை அவர்கள் எதேச்சையாகவோ அழகுக்காகவோ செதுக்கவில்லை. பின்னால் வந்தவர்களும் செதுக்கவில்லை ஏனெனில் அவை கல்லை விட்டுப் புடைப்பகவும் எழுத்துக்களை அழிக்காமலும் செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டும் இந்த விலங்கு உருவங்களும் ஒரே காலத்தை அதாவது முதலாம் குலோத்துங்கனின் காலத்தையே சேர்ந்ததாகும். இவனது மெய்கீர்த்தியில் மேருவில் புலி விளையாட என்று வருகிறது.இது இமய மலையில் இவன் சோழர்களின் அரச சின்னமான புலிக்கொடியை பறக்கவிட்டதை குறிக்கிறது. மெய்கீர்த்தி தொடங்கும் முதல் பத்தியின் முடிவில் புலியின் சின்னத்தை இங்கு பொறித்திருப்பது மெய்கீர்த்தியை படம்பிடித்து காட்டுவதாக அமைகிறது. வழக்கமாக புலி அமர்ந்திருப்பது போலத்தான் சோழர் காசுகளிலும் செப்புப்பட்டய முத்திரைகளிலும் காட்டப்பட்டிருக்கும். இங்கோ புலி பாய்வது போன்றும் முகம் நம்மை பார்ப்பது போன்றும் உள்ளது. புலியின் முகமும் வழக்கமான புலியின் முகம் போல் இல்லாமல் சிம்ம முகம் போன்றுள்ளது. இதனை யாளி என்று சிற்ப நூல்கள் குறிப்பிடும். இத்தகைய புலி அமைப்பினை ஒய்சாளர்களின் பேலூர் போன்ற கோயில்களில் தான் காணமுடிகிறது. இதற்கு முன்னர் கல்வெட்டில் புலி காணப்படுவது பெண்ணேஸ்வரமடத்தில்தான். அதில் இயற்கையாக புலி அமர்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கும். அது வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் நாச்சியார் சோழனை முழுதுடையார் பத்து பசுவை இறைவனுக்கு தானமாகக் கொடுத்த தானக் கல்வெட்டாகும். இவர் மூன்றாம் ராஜராஜனின் பட்டத்தரசி எனக் கருதப்படுகிறது. ஒசூரில் காணப்படும் புலியோ முற்றிலும் மாறுபட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஒசூர் பகுதி அதிக அளவில் ஒய்சாளர்களின் கலைத்தாக்கத்தைக் கொண்டுள்ளதாகும். அத்திமுகம், மதகொண்டப்பள்ளி, பேரிகை, கும்ளாபுரம், மல்லிகார்ஜுனதுர்க்கம், ஒசூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில் மற்றும் சிற்பங்களில் ஒய்சாளர்களின் கலைத்தாக்கம் இருப்பதை தூண்களின் அமைப்பு, மஹிசாசுர மர்த்தினி, சூரியன், வீரபத்திரர் போன்ற சிற்பங்களின் அமைப்புகளில் இருந்து அறியலாம். கருவறை இறையுருவ சிற்ப பீடங்களில் மத்தியில் அமர்ந்தநிலையில் யாளியைக் காட்டுவதும் இப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாகும்.குலோத்துங்கனின் மெய்கீர்த்தியில் பல போர்களில் வென்று ஆயிரக்கணக்கான யானைகளை தன் நாட்டிற்கு கொண்டுவந்தான் எனக்குறிப்பிடுகிறது. இதை விளக்கவே இரண்டாவது பத்தியில் யானை ஒன்று தன் தலையை வணங்கியிருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள புலிச்சின்னமானது தமிழகத்திலேயே பெண்ணேஸ்வரமடத்தையடுத்து இரண்டாவது புலிச்சின்னமாகும். மேலும் சோழரின் மெய்கீர்த்தியோடு கூடிய தமிழகத்தின் முதலாவது புலிச்சின்னம் இதுவாகும். எனவே சோழரின் வரலாற்று ஆய்வில் இக்கண்டுபிடிப்பு முக்கிய பங்கு வகிக்கக் கூடியதோடு வரலாற்று அறிஞர்களின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாகும் என்றார். இந்த ஆய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதானந்த கிருஷ்ணகுமார், அபிஷேக் . ஒசூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் வெங்கடேசன் .... பேராசிரியர்கள்...பாத்திமாகணி, இளையராசா.. மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு 26.3.25

மரபுநடை - கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியால் மகளிர் தினத்தில் 2018ல் தொடங்கப்பட்டு அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை இவற்றுடன் இணைந்து – கடந்த 6 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி வரலாற்று தடையங்களை ஆவணப்படுத்தியும் 150 புதிய கல்வெட்டுகளை கண்டறிந்தும் பல தொல்லியல் தடயங்களை தொடர்ந்து கண்டறிந்தும் வருகிறது கிருஷ்ணகிரி வரலாற்றில் புதிய பக்கங்களை சேர்த்து வருகிறது. – இது மட்டுமல்லாமல் வருடத்திற்கு இரண்டு முறை கிராமப்புற மாணவர்களுக்கு தொல்லியல் , வரலாற்று களப்பயணத்தை நடத்திவருகிறது. கிராமங்களில் பள்ளி அருகே உள்ள வரலாற்று தடையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களைத் தேடி வரலாறு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது . .தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் சென்னானூர் அகழ்வாய்வு தளத்தையும் இக்குழு கண்டறிந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் சென்னானூர் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது . இக்குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் மரபு நடையை தொடங்க உள்ளது . இது முழுக்க பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது . இந்த நிகழ்வினை 29.03.25 காலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குறைவாகக் காண்க

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...