கள ஆய்வில் கல்லூரி மாணவர்கள்
பூசாரிப்பட்டியில் விஜயநகரர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு:
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியும் இணைந்து கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் 15 நாட்கள் தொல்லியல் பயிலரங்கத்தை நடத்திவருகிறது. இதில் கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 32 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் தொல்லியலின் பிரிவுகளான நாணயவியல், கல்வெட்டியல், கோயில் கட்டடக்கலை சிற்பக்கலை, மேற்பரப்புக் கள ஆய்வு, அகழாய்வு, நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளித்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியை அடுத்த பூசாரிப்பட்டியில் களஆய்வு பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டபோது அங்கு விஜயநகரர் காலத்தை சேர்ந்த அச்சுத தேவராயனின் கல்வெட்டினை கண்டறிந்தனர். இதனை எவ்வாறு படித்து அதன் பொருளை தெரிந்துக் கொள்வது என்பது குறித்து அங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து காப்பாட்சியர் தெரிவித்தது: மாணவர்களால் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டானது பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியது. இது ஒரு பெரிய பாறையின்மீது 15 அடி நீளம் 10 அடி உயரமுள்ள பரப்பில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. இது பொது ஆண்டு 1533ல் அச்சுததேவராயன் என்ற விஜயநகர மன்னனின் காலத்தை சேர்ந்தது. தற்போது பிரபலமாய் இருக்கக்கூடிய பைரவர் கோயிலுக்கு நைவேத்தியம் மற்றும் திருவிளக்கு ஏற்றுவதற்காக தற்போது காட்டிநாயனப்பள்ளி என்றழைக்கப்படும் ஊரை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இவ்வூர் அப்போது காட்டை நாயக்கன் பட்டி என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது. மேலும் கரடிகுறியானது புதுப்பற்றுநாட்டு கீழ்க்கோட்டையை சேர்ந்த கரடிகுறிக்கை என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி கீழக்கோட்டை என்று அழைக்கப்பட்டதிலிருந்து இதனை ஒட்டி மேற்கில் அமைந்துள்ள கிருஷ்ணகிரியானது அப்போது மேலைக்கோட்டை என்று அழைக்கப்பட்டதாக அறியலாம். கிருஷ்ணகிரியை மேலைக்கோட்டை என்று அழைக்கப்பட்டதாக நரசிம்மசாமி கோயிலின் அழிந்துவிட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிட்டதாகக் கூறும் தகவல் இதன்மூலம் உறுதியாகிறது என்றார். இக்கள ஆய்வின்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆயு;வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாறு ஆசிரியர் ரவி, மற்றும் அரசுக் கரைக்கல்லூரி பேராசிரியர் வெங்கடேஸ்வரன்,
ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment