கிருஷ்ணகிரியில் இருந்து மகாராஜகடை செல்லும் சாலையில் மேல்பட்டியை அடுத்த தர்மராஜ நகருக்கு மேற்கே ஒரு பாறையில் ஓவியங்கள் இருப்பதை கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் திரு நாராயண மூர்த்தி அவர்கள் தெரிவிக்க கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து 19 5 2022 அன்று ஆய்வு செய்தனர். இதில் தலைவர் நாராயணமூர்த்தி ஒருங்கிபைப்பாளர் தமிழ்ச்செல்வன் மாருதி மனோகரன் விஜயகுமார் வரலாறு ஆசிரியர். எம்.என். ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
இப்பாறை ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது :இப்பாறை ஓவியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்தினால் வரையப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. பாண்டில் விளக்கு, குறியீடுகள் மற்றும் மனித உருவங்கள் இவற்றுள் அடங்கும். குறியீடுகளில் வட்டத்துக்குள் கூட்டல் குறி அவற்றுக்கிடையே 4 புள்ளிகள், பெருக்கல் குறியின் இரண்டு முனைகளும் இணைந்த அமைப்பு, மற்றும் ஆறு முனையுடன் கூடிய நட்சத்திரம் வட்டம் பல கட்டங்களாக பிரிக்கப்பட்ட கோலம் போன்ற அமைப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும் வட்டத்துக்குள் மனிதன், சதுரத்துக்குள் மனிதன் என வரையப்பட்டுள்ளன. இவை இறந்த மனிதனை அடக்கம் செய்து இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஏழு எண்ணிக்கையில் இறந்தவர்களின் ஆன்மாவைக் குறிக்கும் பாண்டில் விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவிலும் ஒவ்வொரு விதமாக அலங்கரிக்கப்படும் வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டுள்ளன மொத்தத்தில் இவ்வோவியங்கள் இறந்தோரின் நினைவாக வரையப்பட்டுள்ளது என்பது உறுதியாகும். இக்குகைப் போன்ற அமைப்பிற்கு முன்னால் பரந்த வயல்வெளிகள் காணப்படுகின்றன அவ்விடங்களில் முன்பொரு காலத்தில் கல்திட்டைகள் இருந்திருக்க வேண்டும் அக்கல் திட்டைகளையும் இந்த ஓவியத்தில் காட்டியுள்ளனர். ஓவியங்கள் காணப்படும் கூரைக்கு கீழே உள்ள கல் பரப்பில் சுமார் 10 பேர் அமரும் வண்ணம் உள்ளது இங்கு தற்காலத்திய பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் பெரும்பாலும் மலைக் குகைகளில் காணப்படும். இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டும் தரைமட்ட பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment